Wednesday, March 18, 2009

இடம்பெயர்ந்து குடாநாட்டிற்கு வந்தோருக்கு இந்து அமைப்புகள் 20 இலட்சம் ரூபா உதவி!!!

இடம்பெயர்ந்து குடாநாட்டிற்கு வந்தோருக்கு இந்து அமைப்புகள் 20 இலட்சம் ரூபா உதவி

[18 - March - 2009]

வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து வந்து யாழ்.குடாநாட்டிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு யாழ்.இந்து அமைப்புகளின் ஒன்றியம் 20 இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்தப் பொருட்கள் யாழ். அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் தலைமையிலான இந்து அமைப்புகளின் ஒன்றியப் பிரதிநிதிகள் அத்தியாவசியப் பொருட்களை அரச அதிபரிடம் கையளித்தனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களும் உடுபுடவைகளும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பவதிகளுக்கான சத்துணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

இந்தப் பொருட்களை அரச அதிபர் கொண்டு சென்று நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு வழங்கவுள்ளார்.

மேற்படி நலன்புரி நிலையங்களில் வசிக்கின்ற மக்களை இந்துக் குருமார்கள் சென்று சந்திப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மேற்படி நலன்புரி நிலையங்களில் வசிக்கின்ற மக்களுக்கான தேவைகள் அதிகமாக இருப்பதால் தாங்கள் வழங்குகின்ற இந்த உதவிகள் அவர்களுக்குப் போதுமானதல்ல வெனவும் யாழ். குடாநாட்டிலுள்ள சேவையுள்ளம் படைத்தவர்கள் மற்றும் பணம் படைத்தவர்களை இதற்கு உதவுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

இவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் இல 14, பலாலி வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியிலுள்ள இந்து சமயப் பேரவை அலுவலகத்தில் பொருட்களை வழங்கலாமெனவும் யாழ். ஸ்ரான்லி வீதியிலுள்ள இலங்கை வங்கிக் கிளையில் 8944876 என்ற கணக்கு இலக்கத்தில் பணத்தை வைப்புச் செய்யலாமெனவும் இந்து அமைப்புகளின் ஒன்றியம் அறிவித்திருக்கின்றது.

Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com

No comments: