Wednesday, February 25, 2009

LIFE CIRCLE OR LIFE CIRCUS.....WHAT FOR...!!!???

ஓம் கிரியா பாபாஜி நம ஓம்..
என் பிரியம் நிறைந்தவர்களுக்கு வணக்கங்கள்...



சிவராத்திரி நாளில் சட்டென எனக்குள் எழுந்த வரிகள் இவை...
தங்களிடம் காட்ட விரும்புகிறேன்...

------------------------------------------
அது… இது…

முன் செய்த வல்வினையால்
முந்தி வந்த விந்துத்துளி..
அடைத்து வைத்த தோல் பைக்குள்
அடங்கிப்போய் சூல் கொள்ள…
வெள்ளை ரத்தம் சிவப்பாகி
நாடி நரம்பு சதை பிடித்து..
அவனவளாய் இனம் பிரிந்து
பிண்டமென உருவெடுத்து..
ஐயிரெண்டு மாதமதில்
அன்னையவள் உந்தித் தள்ள..
நச்சுப் பையும் ஒட்டிப் பிறந்து
அண்டமதில் அலைந்து திரிந்து..
அங்கும் இங்கும் கூத்தாடி
பொய்யை மெய்யாய் தினம் நாடி..
அகமதன் அர்த்தநிலை
ஐயோ ஒன்றும் புரியாது…
சொந்த பந்த காட்டுக்குள்ளே
இன்பத் துன்பக் கூடு கட்டி..
இன்னொரு சதைப் பிண்டம் தேடி
சேர்த்து வைத்த விந்து கொட்டி..
மீண்டும் மீண்டும்
மீண்டும் மீண்டும்
பிறப்பெடுத்து பிறப்பெடுத்து…
பிறவியதன் கட்டறுக்க
இருக்கும் வழி காணாது…
சுழல்கின்ற பூமியின்மேல்
சுற்றி சுற்றி வந்து வந்து..
சூட்சுமத்தை உணராது
சுடுகாட்டில் பிணமாகி…

மற்றுமொரு தோல்பைக்குள்
மாற்றமில்லா விந்தாகி……

அப்பப்பா போதுமப்பா
கண்டுகொள்வோம் மூலமதை…
உயிர் கொடுத்து உருட்டியவன்..
உலகமதை திரட்டியவன்..
பிறப்பு எனும் வட்டத்துக்குள்
செக்கு மாடாய் சுழற்றியவன்..
அவனை இனம் காணத் தேடி
நித்தம் தேடி ஓடி ஓடி..
வெளியெங்கும் காணாது
வேறு வழி தெரியாது..
உள்ளுக்குள் உள் நுழைந்து
உற்றவனை கண்டு கொண்டு..
அவனே நானாகி..
நானே அனைத்துமாகி..
ஆதி அந்தம் தெளிந்து
உண்மையதை உணர்ந்து..

அம்மம்மா இறுதியில்
அண்டசராசரம் எங்கும்..
எல்லையற்று கலந்திருக்கும் அது
என ஆனதப்பா முடிவிலே இது !
--------------------------------------------

என் நெஞ்சுக்குள் நீண்ட நாளாய் முட்டிக் கொண்டிருந்த
வரிகளை கொட்டி விட்ட திருப்தியோடும்…
மகா சிவராத்திரிக்கான சிவநிலையோடும்…….

பிரியமுடன்…
பிரியன்…
......SAV

No comments: